படையெடுப்பு குறித்த அச்சத்தை எழுப்பிய பின்னர், உக்ரைனுக்கு அருகில் இருந்து தமது சில துருப்புக்களை திரும்பப் பெறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் எல்லையில் உள்ள இராணுவ மாவட்டங்களில் பயிற்சிகளை நடத்தி வரும் சில துருப்புக்களை திரும்பப் பெறுவதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘திட்டமிட்டபடி பயிற்சிகள் உட்பட பல போர் பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன’ என்று பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் கூறினார்.
பெப்ரவரி 20ஆம் திகதி முடிவடையவுள்ள ரஷ்யா- பெலாரஸ் கூட்டு பயிற்சி போன்ற சில பயிற்சிகள் தொடர்கின்றன.
இந்தநிலையில், திரும்பப் பெறும் துருப்புக்களின் அளவைக் காண காத்திருப்பதாக பிரித்தானியா கூறியுள்ளது.
இதனிடையே, ஜேர்மனியின் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் மாஸ்கோவில் ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இது சாத்தியமான நெருக்கடியைத் தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
உக்ரைனின் எல்லையில் சுமார் 100,000 வீரர்கள் குவிக்கப்பட்ட போதிலும் உக்ரைன் மீது படையெடுப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என ரஷ்யா மறுத்துள்ளது.
ஆனால், சில மேற்கத்திய நாடுகள் ரஷ்யா இராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக எச்சரித்துள்ளன.
மாஸ்கோ ‘எந்த நேரத்திலும்’ வான்வழி குண்டுவீச்சுகளுடன் தாக்குதல்களை தொடங்கலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட நாடுகள், உக்ரைனை விட்டு வெளியேறுமாறு தங்கள் குடிமக்களை வலியுறுத்தியுள்ளன. மேலும் சிலர் தலைநகரில் இருந்து தூதரக ஊழியர்களை வெளியேற்றியுள்ளனர்.
உக்ரைன் நேட்டோவில் சேர அனுமதிக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தை ரஷ்யா கோரி வருகிறமை குறிப்பிடத்தக்கது.