உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என்ற அச்சத்துக்கு மத்தியில், அணு ஆயுதங்களைக் கையாள்வதற்கான போர்ப் பயிற்சியை ரஷ்யா இராணுவம் இன்று (சனிக்கிழமை) தொடங்கவுள்ளது.
இந்த மாபெரும் அணு ஆயுத போர்ப் பயிற்சியை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் நேரில் பார்வையிடவுள்ளார்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனை உள்பட பல்வேறு சோதனைகள் இந்தப் பயிற்சியின்போது மேற்கொள்ளப்படவிருக்கிறது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறையிலிருந்தபடி இந்தப் பயிற்சியை ஜனாதிபதி விளாடிமீர் புடின மேற்பார்வையிடுவார். ஏவுகணை சோதனைகள் குறித்த ஆலோசனைகளையும் அவர் வழங்குவார்.
இந்தப் பயிற்சி நீண்ட காலத்துக்கு முன்னரே திட்டமிடப்பட்டதாகும். ரஷ்யாவிடமுள்ள அணு ஆயுதங்கள் மற்றும் பிற வகை ஆயுதத் தளவாடங்களின் நம்பகத் தன்மை, அந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான படையினர் மற்றும் அதிகாரிகளின் தயார்நிலை ஆகியவற்றை சோதித்துப் பார்ப்பதற்காக இந்தப் பயிற்சியை நடத்த திட்டமிடப்பட்டது.