உக்ரைன் விவகாரத்தில் இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும் என ஐ.நா சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டிஎஸ் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவசர கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடரந்து தெரிவித்த அவர், ” உக்ரைன் தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் ரஷ்யாவின் தொடர் அறிவிப்புகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
ரஷ்ய கூட்டமைப்புடன் உக்ரைன் எல்லையில் பதற்றம் அதிகரிப்பது ஆழ்ந்த கவலைக்குரிய விடயமாக மாறியுள்ளது. இந்த முன்னேற்றங்கள் பிராந்தியத்தின் அமைதியையும், பாதுகாப்பையும் குறை மதிப்பிற்கு உட்படுத்தும் சாத்தியம் உள்ளது.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கான இன்றியமையாத தேவையை நாங்கள் வலுவாக வலியுறுத்துகிறோம். அதன்மூலம் பரஸ்பர இணக்கமான தீர்வு விரைவில் எட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.