உக்ரைனில் ஒரு இராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
மாஸ்கோவில் இன்று (வியாழக்கிழமை) காலை 6:00 மணிக்கு நடைபெற்ற ஊடக சந்திப்பில், ‘நான் ஒரு இராணுவ நடவடிக்கையின் முடிவை எடுத்துள்ளேன்,’ என்று புடின் கூறி இந்த உலகையே ஆச்சரியத்துக்கு உள்ளாக்கினார்.
அத்துடன், இந்த நடவடிக்கைகளில் தலையிடும் எவருக்கும் பதிலடி கொடுப்பதாக புடின் கூறினார். மேலும், உக்ரைன் இராணுவத்தை ஆயுதங்களைக் கீழே போடுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
மேற்கத்திய சீற்றம் மற்றும் போரைத் தொடங்க வேண்டாம் என்ற உலகளாவிய வேண்டுகோளை மீறி புடினின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐரோப்பாவில் ஒரு பெரிய போருக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று ரஷ்யர்களுக்கு உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள் விடுத்தார்.
இந்த அறிவிப்புக்கு பின்னர், இந்த அறிவிப்பை கண்டித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ‘ஜனாதிபதி புடின் ஒரு திட்டமிடப்பட்ட போரைத் தேர்ந்தெடுத்துள்ளார், அது பேரழிவுகரமான உயிர் இழப்பு மற்றும் மனித துன்பங்களைக் கொண்டுவரும்’ என கூறினார்.
ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகளுக்கு அப்பால் அமெரிக்கா எடுக்கும் கூடுதல் நடவடிக்கைகளை அறிவிப்பதற்காக இன்று (வியாழன்) தேசத்திற்கு உரையாற்றுவேன் என்று பைடன் கூறினார்.