உக்ரைன் தலைநகர் கீவ்வில் ஐந்து முதல் ஆறு குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதாக, அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கீவ்வில் உள்ள முக்கிய விமான நிலையமான போரிஸ்பில் அருகே இன்று (வியாழக்கிழமை) துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இன்று காலை ரஷ்ய மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜனாதிபதி புடின், சிறப்பு ராணுவ நடவடிக்கையை அறிவித்தார்.
தனது கருத்துகளில் உக்ரைனிய மக்கள் நாட்டை ஆட்சி செய்பவர்களைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்க முடியும் என்று கூறிய அவர், உக்ரைனை ஆக்கிரமிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து கண்டன அறிக்கையை வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ‘இது, ரஷ்ய இராணுவத்தின் தூண்டுதலற்ற மற்றும் நியாயமற்ற தாக்குதல். உலகின் பிரார்த்தனைகள் உக்ரைன் மக்களுடன் இருக்கின்றன.
ஜனாதிபதி புடின் ஒரு திட்டமிடப்பட்ட போரைத் தேர்ந்தெடுத்துள்ளார். அது பேரழிவுகரமான உயிர் இழப்பு மற்றும் மனித துயரங்களைக் கொண்டுவரும். இந்த தாக்குதலால் ஏற்படும் மரணம் மற்றும் அழிவுக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பாகும். அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தீர்க்கமான முறையில் பதிலளிக்கும்’ என கூறினார்.