பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரி திருகோணமலையிலும் இன்று(சனிக்கிழமை) மாலை கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் சிவன் கோவிலடி தந்தை செல்வா உருவ சிலைக்கு முன்பாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் கையெழுத்திடும் நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உருப்பினர்களான இரா.சாணக்கியன், எம்.ஏ சுமந்திரன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் vன பலரும் பங்கேற்றிருந்தனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதற்கான கையெழுத்துப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இது வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டிருந்ததோடு, கிழக்கு மாகாணத்திலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.