ரஷ்யா ஒரு புறம் உக்ரைனில் குண்டு பொழிய மறுபுறம் மேற்குலகம் ரஷ்யா மீது சரமாரியாகத் தடைகளைப் பொழிந்து தள்ளிவருகின்றது. அவற்றில் மிக உச்சமாக ரஷ்யாவை உலக வங்கிகளுக்கு இடையேயான நிதித் தொலைத்தொடர்பு வலைச் சமூகத்தில் இருந்து Society for Worldwide Interbank Financial Telecommunication – SWIFT) விலக்கி வைக்கும் முடிவுகளை ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, கனடா, , பிாித்தானியா போன்றவை வெளியிட்டுள்ளன. இதனையே “ஸ்விஃப்ட்” என்றுசுருக்கமாக அழைக்கிறார்கள்.
“தடைகளுக்கெல்லாம் தாய்” அல்லது “நிதி அணு ஆயுதம்” என்று இதனை மேற்கு நாடுகளது வல்லுநர்கள் கூறுகின்றனர். ஸ்விஃப்ட் தடையை அடுத்து ரஷ்யாவின் வங்கிகள் உலக நிதித் தொடர்புகளை இழந்து திவாலாகக் கூடும் என்ற அச்சம் அங்கு எழுந்துள்ளது.தங்கள் சேமிப்புக்களை வழித்துத் துடைத்து எடுத்துக்கொள்வதற்காக ரஷ்யர்கள்
வங்கிகளில் முண்டியடித்து வருகின்றனர்.
பணம் விநியோக இயந்திரங்களின் முன்பாக நீண்டவரிசைகள் தோன்றி உள்ளன. ரஷ்யாவின் மத்திய வங்கி அமைதி பேணுமாறு வங்கிகளது வாடிக்கையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. நிதி ஸ்திரத்தன்மையைப் பராமரிக்கவும், நிதித்துறையின் செயல்பாட்டு தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும் தேவையான ஆதாரங்கள் மற்றும் கருவிகளை ரஷ்யா வங்கி தன் வசம் வைத்துள்ளது-என்று அது விடுத்த ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் பெறக்கூடிய போர் வெற்றியை விடவும் ஸ்விஃப்ட் தடை அடுத்து வரவுள்ள மாதங்களில் ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கி சர்வதேச அரங்கில்அதனை ஒரு மூலையில் முடக்கிவிடும்
ஸ்விஃப்ட் (SWIFT) தடை என்றால்என்ன?
ஸ்விஃப்ட் (உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதித் தொலைத் தொடர்புக்கான சமூகம்) என்பது ஒரு உலகளாவிய நிதி இரத்த நாடி ஆகும். இது நாடு களது எல்லைகளுக்குள் சீரான மற்றும் விரைவான பணப் பரிமாற்றத்தை அனுமதிக்கிறது.
கிட்டத்தட்ட 200 நாடுகளில் உள்ள 11,000 க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் SWIFT ஐப் பயன்படுத்துகின்றன, சர்வதேச நிதிப் பரிமாற்ற அமைப்பின் முதுகெலும்பாக இதுவே உள்ளது.
முதன் முதலாக 1970 களில் நிறுவப்பட்டது. சர்வதேச நிதிச் செய்திச் சேவையை உருவாக்கும் லட்சியம் மற்றும் புதிய நோக்கு, சர்வதேச நிதிச்செய்திகளுக்கான பொதுவான மொழி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
பெல்ஜியத்தைத் தளமாகக் கொண்டு, பெல்ஜியத்தின் தேசிய வங்கியினால் ஸ்விஃப்ட் மேற்பார்வையிடப்பட்டு, அமெரிக்க சமஷ்டி ரிசேர்வ் வங்கி, இங்கிலாந்து வங்கி உட்பட உலகெங்கிலும் உள்ள முக்கிய மத்திய வங்கிகளுடன் ஒரு கூட்டமைப்பாகச் செயற்படுகிறது.
பெல்ஜியச் சட்டத்தின் கீழ், இது ஒரு கூட்டுறவு நிறுவனம்.நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே டிரில்லியன் கணக்கான டொலர்கள் கைமாறுவதால், SWIFT நாளொன்றுக்கு 40 மில்லியனுக்கும் அதிகமான செய்திகளைப் பரிமாறுகிறது.
அந்தச் செய்திகளில் 1% க்கும் அதிகமானவை ரஷ்யக் கட்டணங்களை உள்ளடக்கியது. ரஷ்யாவின் தேசிய ஸ்விஃப்ட் அமைப்பினது கூற்றுப்படி, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ரஷ்யா இரண்டாவது அதிக பயனர்களைக் கொண்டுள்ளது, சுமார் 300 ரஷ்ய நிதி நிறுவனங்கள் இந்த அமைப்பைச் சேர்ந்தவை. மேலும், ரஷ்யாவின் நிதி நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை SWIFT இல் உறுப்பினர்களாக உள்ளன.
எனவே, ரஷ்யாவை SWIFT இலிருந்து தடைசெய்வது, உலகின் பெரும்பாலான நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் ரஷ்யாவின் திறனை முடக்கி அதன் பொருளாதாரத்திற்குப் பெரும் அடியாக மாறும்.இதில் “பூமராங்” போன்று தடையைப் போட்டவர்களையே திருப்பித் தாக்கும்ஆபத்துகள் உண்டென்பதால் ஸ்விஃப்ட்விடயத்தில் மேற்கு நாடுகள் பிளவுபட்டுள்ளன.
ரஷ்யாவிடமிருந்து தடை போட்ட நாடுகளது நிறுவனங்களுக்கு வரவேண்டிய கடன்கள், கொடுப்பனவுகளையும் அது தடுத்துவிடும் அபாயம் இருக்கிறது.அதிபர் புடின் போரைத் தொடங்குதற்கு முன்னராகவே இது போன்ற மேற்குலக விளைவுகளை எதிர்பார்த்திருந்தவர் என்பதால் ஸ்விஃப்ட் தடைக்கு மாற்றாக ரஷ்யாவின் நிதி வலைப்பின்னல்களை சீர்குலைய விடாது தடுக்கும் மாற்று வசதிகளை ஏற்கனவே தயார்ப்படுத்தியுள்ளார் என்று மொஸ்கோவுக்கு ஆதரவான தரப்புகள் கூறுகின்றன.-
——————————————————————–
பாரிஸிலிருந்து குமாரதாஸன். 27-02-2022