உக்ரைனில் இருந்து 60 சதவீத இந்தியர்கள் இதுவரை வெளியேறியுள்ளதாக வெளியுறவுச் செயலாளர் சிருங்காலா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். மொத்தமாக 20 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் சிக்குண்டு இருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 60 சதவீதமானோர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய நாற்பது சதவீதம் பேரில் பாதிப்பேர் எல்லைகளை அடைந்துவிட்டதாகவும், 20 சதவீத இந்தியர்கள் போர் ஆபத்து சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை குறித்த போரில் கர்நாடகாவை சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயம் அடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கிருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. இதன்படி 26 சிறப்பு விமானங்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் உக்ரைன் எல்லையில் சிக்கி இருக்கும் இந்தியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை போலந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.
உக்ரைனின் லிவிவ், டெர்னொபில் உள்ளிட்ட பகுதிகளில் சிக்கி இருக்கும் இந்தியர்கள் விரைவாக Budomierz எல்லை வழியாக போலந்திற்குள் வருமாறும் Shehyni-Medyka எல்லையை தவிர்க்குமாறு போலந்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.