ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் நேற்று முன்தினம், உக்ரைன் – பெலரஸ் எல்லையில் இடம்பெற்றன.
இணக்கப்பாடுகள் எட்டப்படாத நிலையில், முதற்கட்ட பேச்சவார்த்தை நிறைவடைந்திருந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
எவ்வாறிருப்பினும், கிவ் இல் உள்ள தொழில்நுட்ப மையங்கள் மீது தாக்குதல் நடத்த உள்ளதாகவும் ஆகவே பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறும், ரஷ்யா தெரிவித்திருந்தது.
இதனை அடுத்து தலைநகரில் உள்ள தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரம் ஒன்றின் மீது, ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், உக்ரைனின் இரண்டாவது நகரமான கார்கிவ்வில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், உக்ரைன் மீது குண்டுத் தாக்குதல்கள் நடத்துவதை ரஷ்யா நிறுத்த வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.