உக்ரைன் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்ற விசாரணையை ரஷ்யா புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் நாட்டு மீதான தாக்குதலை நிறுத்த ரஷ்யாவுக்கு உத்தரவிட வேண்டுமென சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் வலியுறுத்திய நிலையில், இந்த விசாரணைக்கு ரஷ்யா தனது பிரதிநிதியை அனுப்பவில்லை.
இந்த விசாரணையில் பங்கேற்க தங்கள் அரசாங்கத்துக்கு விருப்பமில்லை என நெதர்லாந்துக்கான ரஷ்ய தூதர் நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளார்.
‘உக்ரைனின் கிழக்கு பிராந்தியங்களான லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் ஆகியவற்றில் இனப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. ஆனால், ரஷ்யா கூறுவது கொடூரமான பொய்.
இந்த விசாரணையை ரஷ்ய பிரதிநிதி புறக்கணித்திருப்பதிலிருந்தே உண்மையை அறிந்துகொள்ளலாம். எனவே, இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்தும்படி ரஷ்யாவுக்கு உத்தரவிட வேண்டும்’ என உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரிநெவிச் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.