உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யாவும் பெலரஸும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு சாதகமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
இலங்கை மனித உரிமைகள், நல்லிணக்க நடவடிக்கைகளில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் நேற்று பேசிய ரஷ்யா, அதிகமாக தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியுள்ளது.
இதேவேளை உறுப்பு நாடுகளை நோக்கி மேற்குலகின் அரசியல் உத்திகளை நடைமுறைப்படுத்த ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பொறிமுறையாக ஐ.நா. மாறுவதாக பெலரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதனை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட இலங்கை மற்றும் பெலரஸ் தொடர்பான அறிக்கைகள் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.
அத்தோடு போருக்கு பிந்திய இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க முயற்சிகளை தாம் பாராட்டுவதாகவும் பெலரஸ் அறிவித்துள்ளது.
இதேவேளை பல சவால்களுக்கு மத்தியிலும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நேர்மையான முயற்சிகளை பாராட்டுவதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
இதேநேரம் மனித உரிமைகள் பிரச்சினைகளை அரசியலாக்குவதையும், மனித உரிமைகள் என்ற சாக்குப்போக்கில் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதையும் தாம் எப்போதும் எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது.