சிவில் சமூகம், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துமாறு அமெரிக்கா இலங்கையை வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் நேற்று பேசிய அமெரிக்கா, பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான இலங்கையின் முயற்சியையும் 40க்கும் மேற்பட்டவர்கள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டமையும் வரவேற்றுள்ளது.
இருப்பினும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க பயங்கவராத தடைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கருத்துச் சுதந்திரம் இவற்றுள் முக்கியமானது என்றும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு தமிழ், முஸ்லிம் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் இணைந்து நிரந்தரமான அரசியல் தீர்வை முன்னெடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் நல்லிணக்கத்தை மேம்படுத்த, காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் ஆகியவை திறம்பட, சுதந்திரமாக, வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இதேவேளை அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகம் பாதுகாப்பு அமைச்சிலிருந்து வெளியேறிமை மற்றும் சில சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் ஈடுபடுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளையும் அமெரிக்கா வரவேற்றுள்ளது.