நாடு முழுவதும் தேசிய பாடசாலைகளை நிறுவுதல் என்ற அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதி தற்போது நிறைவேறிவருவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் தேசிய பாடசாலை ஒன்றை நிறுவுவதற்கு முன்னுரிமை அளிக்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக கூறினார்.
மாகாண சபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகளை மத்திய அரசால் கையகப்படுத்த முடியாது என என்றும் இது குறித்து மாகாண சபைகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் விதிகள் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளது. எனவே மாகாண சபைகளின் கீழ் உள்ள பாடசாலைகளை கையகப்படுத்துவது சட்டபூர்வமானதா என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.
முன்னாள் கல்வி அமைச்சர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார தனது ஆட்சிக் காலத்தில் இதேபோன்று நூற்றுக்கணக்கான பாடசாலைகளை கையகப்படுத்தியதாக அமைச்சர் குணவர்தன கூறினார்.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் எந்தவொரு பாடசாலையும் கையகப்படுத்தப்படவில்லை என கல்வி அமைச்சர் கூறியதுடன், மாகாண சபைகளுடன் தேவையான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.