ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடை காரணமாக இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் தெரிவித்துள்ளார்.
நவீன பாதுகாப்பு உபகரணங்களை ரஷ்யாவிடமிருந்தே இந்தியா இறக்குமதி செய்து வரும் சூழலில், ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடை இந்தியாவில் தாக்கம் செலுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள வி.கே சரஜ்வத் மேற்படி கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், ”ரஷ்யா மிகச் சிறந்த இராணுவ பலத்தை கொண்டிருப்பதோடு, இராணுவ உபகரணங்கள் உற்பத்தி உள்கட்டமைப்பில் மிகச் சிறந்து விளங்குகிறது. இராணுவ தளவாட உற்பத்தியில் தற்சார்பு நிலையையும் ரஷ்யா எட்டியுள்ளது.
அதேநேரம் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்திருக்கும் இந்தக் குறுகியகால தடைகளால் இந்தியாவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவிடம் பாதுகாப்பு துறைக்கான கையிருப்பு அதிகளவில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.