அவுஸ்ரேலியாவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 22பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நான்கு பேர் இறந்த வடக்கு நியூ சவுத் வேல்ஸில் உள்ள லிஸ்மோர் நகருக்குச் விஜயம் செய்த போது பிரதமர் ஸ்கொட் மோரிசன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
‘தேசிய அளவில் இது ஒரு பெரிய பேரழிவு’ என பிரதமர் ஸ்கொட் மோரிசன் விபரித்தார்.
முந்தைய தெற்கு அரைக்கோள கோடை காலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ பேரழிவுக்கு பதிலளிக்கும் வகையில், 2020ஆம் ஆண்டு டிசம்பரில் சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து வெளியாகும் இது போன்ற முதல் அறிவிப்பு இதுவாகும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உதவித் தொகையைப் பெறுவதற்கு அடையாள ஆவணங்களை வழங்க வேண்டியதில்லை என்றும், சில சூழ்நிலைகளில் மாநில அரசாங்கள் உதவி கோராத பகுதிகளில் மத்திய அரசாங்கம் சுதந்திரமாகச் செயற்படலாம் என்றும் இந்த சட்ட அறிவிப்பின் அர்த்தம்.
கனமழை நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் தற்போதைய அவசரநிலையை உருவாக்கியுள்ளது. அங்கு வெள்ளத்தில் மூழ்கிய சில சமூகங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீயில் போராடிக்கொண்டிருந்தன.
வடக்கு நியூ சவுத் வேல்ஸில் வெள்ள மீட்புக்கு உதவும் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 700இல் இருந்து 2,500ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய நாட்களில் மழை குறைந்துள்ள நிலையில், நியூ சவுத் வேல்ஸைச் சுற்றியுள்ள 40,000பேர் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர். இதில் டசன் கணக்கான சிட்னி புறநகர்ப் பகுதிகளும் அடங்கும்.