தமிழ்தேசிய மக்கள் கூட்டணியின் தலைவரான விக்னேஸ்வரன் கடந்தகிழமை ஓர் ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதிலவர் தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என்று கேட்டிருந்தார். எல்லாக் கட்சிகளும் ஏறக்குறைய சமஸ்டியைத்தான் கேட்கின்றன. எனவே கட்சிகளின் இறுதி இலக்கை பொறுத்தவரை வேறுபாடு இல்லை. ஆனால் கட்சிகளை ஐக்கியப் படுத்த முடியவில்லை என்ற தொனிப்பட அவருடைய அறிக்கை அமைந்திருக்கிறது.
கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் பொதுவாக தயக்கமின்றி முன்வரும் ஒருவர் அவர்.எனவே கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று கேட்பதற்காக அவருக்கு தகமை உண்டு. ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் அரசியலை தொகுத்துப் பார்த்தால் கட்சிகள் ஐக்கியப்படுவதை விடவும் உடைந்துடைந்து போகின்றன என்பதே உண்மை நிலையாகும்.
முதலில் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அணி பிரிந்து போனது.அதன்பின் சுரேஷ் பிரேமச்சந்திரன்,விக்னேஸ்வரன் போன்றவர்கள் பிரிந்து சென்றார்கள்.
இவை தவிர தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து மணிவண்ணன் வெளியேறியிருக்கிறார். அவர் தனக்குரிய வாக்கு வங்கியை படிப்படியாக கட்டி எழுப்பி வருகிறார்.அவர் யாரோடு சேர்வார் என்பதனை இன்று வரையிலும் தெளிவாக வெளிப்படுத்தவில்லை.
எனவே கடந்த 12 ஆண்டுகளையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் உடைந்து கொண்டே போகின்றன.
அதுமட்டுமல்ல தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகையும் குறைந்து கொண்டே போகிறது.கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பின் ஏகபோகம் கேள்விக்குள்ளாக்கியது. அதேசமயம் தமிழ்தேசிய நிலைப்பாட்டுக்கு கிடைத்த ஆசனங்களின் எண்ணிக்கை 13 ஆகச் சுருங்கியது. அதாவது கூட்டமைப்பின் தோல்வி என்பது மாற்று அணியின் வெற்றியாக அமையவில்லை.
மாறாக கூட்டமைப்பு இழந்த ஆறு ஆசனங்களில் மூன்று ஆசனங்களை தென்னிலங்கைக் கட்சிகள் அல்லது தென்னிலங்கை மக்களுக்கு விசுவாசமான தமிழ் கட்சிகள் பெற்றுக்கொண்டன. அதாவது தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்று ஆசனங்களால் குறைந்துவிட்டது. இப்படிப்பார்த்தால் கடந்த 12 ஆண்டுகளில் தமிழ்தேசிய தேசிய அரசியலில் தமிழ் கட்சிகள் சிதறிக் கொண்டே போகின்றன.
இதில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து செயற்பட்டுவரும் ஐந்து கட்சிகளின் கூட்டை எப்படி பார்ப்பது ?
கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 5 கட்சிகள் ஐக்கியப்பட்டு செயற்பட்டு வருகின்றன. இந்த 5 கட்சிகளின் கூட்டுக்குள் கூட்டமைப்பை சேர்ந்த இரண்டு கட்சிகள் உண்டு. கூட்டமைப்புக்குள் இருந்தபடி வேறு ஒரு கூட்டுக்குள் அவர்கள் இணைவது என்பது எதைக் காட்டுகிறது? கூட்டமைப்பு உடையக்கூடிய வாய்ப்புகளைத்தான் காட்டுகிறது. அடுத்த தேர்தலில் தமிழரசுக் கட்சி மேற்படி பங்காளிக் கட்சிகளை தன்னோடு வைத்துக் கொள்ளுமா என்பது சந்தேகம்தான். பங்காளிக் கட்சிகளுக்கு அப்படி ஒரு சந்தேகம் இருப்பதால்தான் அவை ஒரு புதிய கூட்டுக்கு போயிருக்கின்றன. அது ஒரு முன்னெச்சரிக்கை கலந்த கூட்டு. அதாவது 5 கட்சி கூட்டு என்பதே மற்றொரு உடையவைக் குறித்த அச்சத்தின் விளைவுந்தான்.
மேற்படி ஐந்து கட்சிகள் மத்தியிலும் வயதால் மூத்தவராக காணப்படுவது விக்னேஸ்வரன்.ஐந்து கட்சிகளின் கூட்டுக்கு தலைமை தாங்கக்கூடிய ஒருவராக காணப்படுகிறார்.அவருடைய தலைமையை ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலைமைகள் உண்டு. ஆனால் அவர்தான் தலைமை தாங்கத் தயாரில்லை. அவர் அந்தக் கூட்டுக்குத் தலைமை தாங்கி அதை ஒரு பலமான திரட்சியாக முன்னெடுத்துச் செல்வதாகத் தெரியவில்லை.
விக்னேஸ்வரனின் சொந்த கட்சிக்குள்ளேயே அருந்தவபாலன் ஒட்டியும் ஒட்டாமலும் காணப்படுகிறார்.விக்னேஸ்வரனின் கட்சி துடிப்பாக செயல்படுகிறதா என்று கேட்கும் அளவுக்குத்தான் நிலைமை உள்ளது. கடந்த 16 ஆம் திகதி நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் மேற்படி ஐந்து கட்சிகளின் கருத்தரங்கு இடம்பெற்றது. அதற்கு விக்னேஸ்வரன் வந்திருந்தார். அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் அனேகமாக வந்திருக்கவில்லை. விக்னேஸ்வரனும் அவருடைய மெய்க்காவலரும் மட்டுமே வந்திருந்தார்கள். விக்னேஸ்வரன் ஒரு கட்சித் தலைவர். அப்படிப்பட்ட கூட்டங்களுக்கு அவர் தனி ஆளாக வரக்கூடாது. பரிவாரங்களோடு வரவேண்டும். ஒரு சமூகமாக வர வேண்டும். ஆனால் விக்னேஸ்வரன் ஒரு தனி ஆளாக வந்து, ஆனால் ஆழமான ஒரு உரையை வழங்கிவிட்டு இடையிலேயே எழுந்து சென்றுவிட்டார்.
இதுதான் ஐந்து கட்சிகளின் கூட்டின் நிலை. எனவே ஐந்து கட்சிகளின் கூட்டு எதிர்காலத்தில் ஒரு பலமான ஐக்கிய முன்னணியாக வளர்ச்சி பெறுமா என்பது ஏனைய கட்சித் தலைவர்களின் கடும் உழைப்பில்தான் தங்கியிருக்கிறது.
எனவே தொகுத்துப் பார்த்தால் தமிழ் கட்சிகள் ஒரு பலமான திரட்சியாக இல்லை.கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தின் அடிப்படையில், அக்கட்சிகளை ஒருங்கிணைப்பது என்று சொன்னால், ஒன்றில் ஒரு பலமான தலைவர் கட்சிகள் மத்தியில் இருக்க வேண்டும். இல்லையென்றால் பலமான சிவில் சமூகங்கள் ஒன்றிணைந்து கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும். ஆனால் துயரம் என்னவென்றால் தமிழ்க் கட்சிகள் மத்தியில் அவ்வாறு பலமான தலைவரும் இல்லை, பலமான சிவில் சமூகமும் இல்லை. இருக்கின்ற சிவில் சமூகங்கள் பெரும்பாலும் அறிக்கைச் சமூகங்கள். அவை தாமாக முன்வந்து கட்சிகளை ஒருங்கிணைக்க வல்லவை அல்ல.
கடந்த ஆண்டு ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு ஒரு ஒருங்கிணைப்பு நிகழ்ந்தது. காணாமல் ஆக்கப்பட்டோருக்காகப் போராடும் அன்னையர்களின் அனுசரணையோடு அதை முதலில் தொடங்கியது மன்னாரைச் சேர்ந்த சிவகரன். அவர் தலைமையிலான தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம்தான் அந்த ஒருங்கிணைப்பு முயற்சியை முதலில் கிளிநொச்சியில் வைத்து தொடங்கியது. அதன்பின் அந்த ஒருங்கிணைப்பு முயற்சியில் ஏனைய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து கொண்டார்கள். அதன் விளைவாக மூன்று கட்சிகளையும் ஒருகட்டத்தில் ஒரு பொதுக்கருத்தை நோக்கி ஒருங்கிணைக்க முடிந்தது. எனினும், ஒன்றாகக் கடிதம் எழுதிய கூட்டமைப்பு ஐநாவின் பூச்சிய வரைபு வெளிவந்ததும் அந்த ஒருங்கிணைப்பு முயற்சியிலிருந்து பின்வாங்கியது.அதனால் அந்த ஒருங்கிணைப்பு முயற்சி அடுத்தடுத்த கட்டங்களுக்கு போக முடியவில்லை.
இம்முறை அவ்வாறு கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளை யாரும் தொடங்கவில்லை. அதனால் கட்சிகள் தங்கள் தங்கள் பாட்டிலேயே கடிதங்களை எழுதின. அதேசமயம் சிவில் சமூகங்களின் தலையீடு இன்றி டெலோ இயக்கத்தின் முயற்சியால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கி ஒன்றாக செயல்பட்டு வரும் ஐந்து கட்சிகளின் கூட்டுக்குள் தமிழரசுக் கட்சியையோ அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையோ இணைக்க முடியவில்லை.
கடந்த 12 ஆண்டுகால அனுபவங்களையும் தொகுத்துப் பார்த்தால் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை பொறுத்தவரை விக்னேஸ்வரன் எப்பொழுதும் விட்டுக்கொடுத்து நெகிழ்ச்சியாக நடந்துகொள்கிறார்.ஆனால் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அவ்வாறான ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு பொதுவாக தயாரில்லை.
தமிழரசுக்கட்சி தன்னை ஒரு பெரிய கட்சியாக நம்புகிறது. ஏனைய கட்சிகள் தன்னிடமிருந்து உடைந்து போனவை என்றும் நம்புகிறது.எனவே அக்கட்சிகள்தான் தன்னை நோக்கி வர வேண்டுமே தவிர அக்கட்சிகளை நோக்கித் தான் போக வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழரசுக்கட்சி நம்புகிறது. இதனால் ஒருங்கிணைப்பு முயற்சிகளில் தமிழரசுக்கட்சி அதிகம் ஈடுபாடு காட்டுவதில்லை.
அதேசமயம், தமிழரசுக் கட்சியும் இப்பொழுது ஈடாடிக் கொண்டிருக்கிறது. அதன் தலைமைத்துவத்தை நோக்கி போட்டிகள் உருவாகத் தொடங்கிவிட்டன. இது எதிர்காலத்தில் அக்கட்சியை எப்படி உருக்குலைக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி எப்பொழுதும் கொள்கை ரீதியாக தன்னை ஏனைய கட்சிகளிடமிருந்து பிரித்துப் பார்க்கிறது. ஐக்கிய முயற்சிகளின் போது அல்லது பொது ஆவணங்களைத் தயாரிக்கும் பொழுது அந்த ஆவணத்தின் கொள்கை ரீதியான நிலைப்பாடுகளை தீர்மானிக்கும் இடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிதான் அதிகம் பங்களிப்பைச் செய்கிறது.
ஆனால் அக்கொள்கையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு மக்கள் மயப்படுத்தி நடைமுறைப்படுத்தும் விடையங்களில் அக்கட்சி ஏனைய கட்சிகளோடு ஒருங்கிணைய மறுக்கிறது.
கடந்த 12 ஆண்டு கால அனுபவத்தை தொகுத்துப் பார்த்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது ஒரு பெரிய ஐக்கிய முன்னணியை உருவாக்கி தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் ஆர்வமுடைய கட்சியாக தெரியவில்லை. மேலும் ஒருங்கிணைப்பு முயற்சிகளில் அக்கட்சியை உள்ளீர்க்கும் சக்தி தமிழ் சிவில் சமூக அமையத்துக்குத்தான் உண்டு. ஏனைய கட்சித் தலைவர்களுக்கு கிடையாது.
எனவே மேற்கண்டவைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் மிகவும் தெளிவாக கிடைக்கும் விடை என்னவென்றால், தமிழ்க் கட்சிகளை ஒரு கூட்டு முன்னணிக்குள் கொண்டுவரத் தேவையான பலமான தலைமையும் இல்லை பலமான சிவில் சமூகமும் இல்லை என்பதுதான்.
எனவே இப்படியே போனால் இப்போதுள்ள கட்சிகள் மேலும் உடையக் கூடும். தமிழ் வாக்குகள் மேலும் சிதறக்கூடும். இந்த விளக்கத்தின் பின்னணியில் அடுத்த தேர்தலை நோக்கி சிந்திக்கும் பொழுது அச்சமாக இல்லையா?
-நிலாந்தன்-