அபிவிருத்தி என்னும் போர்வையில் திருகோணமலை மாவட்டத்தில் கால் பதிக்கும் இந்தியா, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழ்மக்களது அபிலாசைகளுக்கு எதிராக தன்னுடைய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இருப்பை பயன்படுத்தக்கூடாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளர் ஸ்ரீ ஞானேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் ..
மேலும் அவர் தெரிவிக்கையில் திருகோணமலையின் எண்ணெய் குதங்களை நீண்டகால குத்தகை அடிப்படையில் கையகப் படுத்தியுள்ள இந்தியா, தற்போது சம்பூர் பகுதியில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தினை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு இருக்கின்றது.
இதன்மூலமாக திருகோணமலையின் இரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் செல்ல இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இது ஒரு போதும் தமிழ் மக்களது இருப்பிற்கு குந்தகம் விளைவிப்பதாக இருக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .