இரண்டு வருடங்களுக்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டதை அடுத்து, நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து அரசியல் தீர்வு தொடர்பாக கூட்டமைப்பினர் கலந்துரையாடவுள்ளனர்.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாளை பிற்பகல் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் காணிப்பிரச்சினை உட்பட பல பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக உள்ள அரசியல் தீர்வு குறித்தே இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்படும் என நாடளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் இல், கூட்டமைப்பின் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த போதும் பதினொன்றாவது மணி நேரத்தில் இரத்து செய்யப்பட்டது.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்ற பின்னர் கூட்டமைப்பினர் விடுத்த சந்திப்பிற்கான கோரிக்கைகள் ஏறக்குறைய மூன்று வருடங்களாக தொடர்ந்து நிராகரிக்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து வடக்கு, கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்பு தொடர்பான பிரச்சினைகளை சுட்டிக்காட்டி தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெப்ரவரி 24 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்தைப் பற்றி தவறான அனுமானத்தை சித்தரிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட சதி என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.