பலாத்கார வழக்குகளில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவது குறித்து பரிசீலிக்குமாறு நீதியமைச்சர் அலி சப்ரி அண்மையில் விடுத்த அழைப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்வதற்கான அணுகலை அனுமதிப்பதன் மூலம் பெண்களின் சம உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு சட்டத்தை சீர்திருத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தைத் தவிர, வேண்டுமென்றே கருக்கலைப்பை செய்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என 1883 ஆம் ஆண்டு முதல் இலங்கை சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பான, சட்டப்பூர்வமான கருக்கலைப்புக்கான அணுகலை மறுப்பது மனித உரிமைகளை பாதிக்கிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
பல தசாப்தங்களாக பலாத்காரச் சம்பவங்களில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்க 2013 இல் சட்ட ஆணைக்குழுவின் முன்மொழிவுகள் உட்பட சீர்திருத்தத்திற்கான கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதும் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் புதிய சட்டத்தை கொண்டு வரவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் முல்லைத்தீவைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் சட்டவிரோத கருக்கலைப்பு காரணமாக உயிரிழந்தார்.
2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இலங்கையில் 10 முதல் 13 வீதமான மகப்பேறு இறப்புகளுக்கு பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
அதேநேரம் 1999 ஆம் ஆண்டுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 15 முதல் 49 வயதுடைய பெண்கள் மற்றும் சிறுமிகளிடையே கருக்கலைப்பு விகிதம் 20 இல் 1 என்ற அளவில் உள்ளது.
இருப்பினும் 2016 ஆம் ஆண்டில், இலங்கையில் ஒவ்வொரு நாளும் 658 கருக்கலைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு மதிப்பிட்டுள்ளது.