உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில், உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கை எடுத்து வருவதால் அங்கு மருத்துவம் படித்துவந்த ஏராளமான இந்திய மாணவா்கள் படிப்பை பாதியில் கைவிட்டு நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-இன் கீழ் தனிமனித சுதந்திரம் மற்றும் வாழ்வுக்கான பாதுகாப்புக்கான அடிப்படை உரிமை அளிக்கிறது. அதனடிப்படையில் இந்த மாணவா்கள் இந்தியாவில் படிப்பைத் தொடரும் வகையில் சோ்க்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இந்திய கல்வித் திட்டத்தில் இந்த மாணவா்களை சோ்த்துக்கொள்ள ஏதுவாக மருத்துவ பாட சமநிலை தொடா்பு திட்டத்தை வகுத்து வழங்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.