ஷின்ஜியாங் பிராந்தியத்தின் மனாஸ் மாவட்டத்தில் சீன அதிகாரிகள் சுமார் 800 உய்குர்களை தடுத்து வைத்துள்ளனர் என அந்த பகுதியைச் சேர்ந்த அதிகாரியை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உய்குர்களை அடைத்து வைத்திருக்கும் தடுப்பு முகாம் அடுத்தடுத்த பிரிவுகளாக இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்றில் சுமார் 500 ஆண்களும் மற்றொன்றில் சுமார் 270 பெண்களும் உள்ளனர் என அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
குறித்த தகவலை வெளிப்படுத்திய அதிகாரியின் கூற்றுப்படி, இந்த உய்குர் கைதிகள் பிரார்த்தனை செய்வது போன்ற ‘கடுமையான குற்றங்களை’ செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளதோடு தடுப்பு முகாமில் அவர்களுக்கு சீன மொழியான மண்டரின் கற்பிக்கப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், சிறுபான்மை இனக் குழுக்களுக்கு எதிரான அதன் ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக, சீன அதிகாரிகள் பல ஆண்டுகளாக ஷின்ஜியாங்கில் உள்ள முஸ்லிம் உய்குர் வணிகர்கள், புத்திஜீவிகள் மற்றும் கலாசார மற்றும் மத பிரமுகர்களை குறிவைத்து கைதுகளைச் செய்து வருகின்றனர்.
மதத்தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக 2017 ஆம் ஆண்டு முதல் 1.8 மில்லியன் உய்குர்களும் பிற துருக்கிய சிறுபான்மையினரும் ஷின்ஜியாங்கில் உள்ள தடுப்பு முகாம்களின் வலையமைப்பில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
உய்குர் முஸ்லிம்களை வெகுஜன தடுப்பு முகாம்களுக்கு அனுப்புவதன் மூலமும், அவர்களின் மத நடவடிக்கைகளில் தலையிடுவதன் மூலமும், சமூகத்தின் உறுப்பினர்களை சில வகையான வலுக்கட்டாயமாக மறு கல்வி அல்லது போதனைக்கு அனுப்புவதன் மூலமும் சீனா உலகளவில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
எவ்வாறாயினும், பீஜிங் தடுப்புக்காவல்களை நியாயப்படுத்தியது அத்துடன் முகாம்களில் உள்ள மக்களை சித்திரவதை செய்தல் அல்லது ஷின்ஜியாங்கில் வாழும் மற்ற முஸ்லிம்களை தவறாக நடத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளை தொடாச்சியாக மறுத்து வருகின்றது.