‘ஒபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் உக்ரைனில் இருந்து நான்கு நேபாளி பிரஜைகளை வெளியேற்றியமைக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு நேபாளப் பிரதமர் ஷேர் பகதூர் டியூபா நன்றி தெரிவித்துள்ளார்.
‘நான்கு நேபாள நாட்டவர்கள் உக்ரைனில் இருந்து இந்தியா வழியாக நேபாளத்திற்கு வந்துள்ளனர். ‘ஒபரேஷன் கங்கா’ மூலம் நேபாள நாட்டினரை திருப்பி அனுப்ப உதவிய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் இந்திய அரசுக்கு நன்றி’ என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையே நடந்து வரும் போருக்கு மத்தியில், இந்திய அதிகாரிகள், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் இந்திய குடிமக்களை மீட்பதோடு, அங்கு சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினருக்கும் தங்கள் உதவியை வழங்குகின்றது.
முன்னதாக, பங்காளதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவும், உக்ரைனில் ‘ஒபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் சிக்கித் தவிக்கும் அந்நாட்டினரை மீட்டமைக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனில் இருந்து ஒன்பது பங்களாதேஷை இந்தியா மீட்டுள்ளது. மேலும், இந்திய அதிகாரிகளால் மீட்கப்பட்ட பாகிஸ்தான் மாணவி அஸ்மா ஷபீக், கியேவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் பிரதமர் மோடியின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
இதற்கிடையில், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து மாணவர்களை திரும்ப அழைத்து வருவதற்காக இந்திய அரசால் தொடங்கப்பட்ட ‘ஒபரேஷன் கங்கா’வை சுமூகமாக நடத்த உதவிய அதிகாரிகளை வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பாராட்டியுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து 20,000க்கும் மேற்பட்ட குடிமக்களை ‘ஒபரேஷன் கங்கா’வின் கீழ் இந்தியா வெளியேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.