இங்கிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.
முதலிரண்டு போட்டிகள் சமநிலையில் முடிவடைந்த நிலையில், இந்த போட்டியின் வெற்றியின் மூலம் தொடரை 1-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றி தொடரை வென்றது.
கடந்த 24ஆம் திகதி க்ரெனடாவில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 204 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சகீப் மொஹமுத் 49 ஓட்டங்களையும் ஜெக் லீச் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கெமார் ரோச், கெய்ல் மேயர்ஸ், அல்சார்ரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஜெர்மைன் பிளக்வுட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 297 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோசுவா டா சில்வா ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களையும் அல்சார்ரி ஜோசப் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் கிரைஜ் ஓவர்டொன், சகீப் மொஹமத் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஜோ ரூட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 93 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 120 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 28 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லீஸ் 31 ஓட்டங்களையும் பேயர்ஸ்டொவ் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கெய்ல் மேயர்ஸ் 5 விக்கெட்டுகளையும் கெமார் ரோச் 2 விக்கெட்டுகளையும் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் அல்சார்ரி ஜோசப் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 28 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, எவ்வித விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது. இதனால், மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.