மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.
இதன்படி குறித்த வேலை நிறுத்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 20 கோடிக்கும் அதிகமான அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத தொழிலாளர்கள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களின் போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து, ரெயில்வே மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய துறைகளின் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மக்கள் பாதிக்கப்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழகத்தை பொருத்தவரையில் தி.மு.க மற்றும் கூட்டணிகட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பொதுவேலை நிறுத்தத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு இலட்சம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.