இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம்(IMF) வௌியிட்டுள்ள அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சமுர்த்தி, சுயதொழில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையை மதிப்பீடு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம், இலங்கை தொடர்பிலான தமது அறிக்கையை கடந்த 26ஆம் திகதி வௌியிட்டது.
நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பில் 5 யோசனைகளையும் நிதியம் முன்வைத்துள்ளது.
எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணத்தை தீர்மானிப்பதற்கு இலங்கை தன்னியக்க செயன்முறையொன்றை பின்பற்றுவது அவசியம் என சர்வதேச நாணய நிதியம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியம்(IMF) வௌியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் விவாதத்தை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில், நாடாளுமன்றம் கூடுகின்ற எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதம கொறடா, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதிய அறிக்கையின் சில பரிந்துரைகளை, இலங்கை ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அத்துடன், பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு நேரடியாக பிரதிபலன் கிடைப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்துடன் நெருங்கி செயற்படத் தயார் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.