தற்போது கோபத்தை பிரதிபலிக்கும் வகையில் பேஸ்புகில் அதிகரித்து வரும் பொதுமக்களின் கருத்துகளை அனுமதிக்காத ஜனாதிபதியாகவும் அரசியல்வாதியாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணப்படுகின்றார் என சமூக ஊடக ஆய்வாரான சஞ்சன கத்தொடுவ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பதிவுகளுக்கு கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு மில்லியனுக்கும் அதிக பின்பற்றுனர்களைக் கொண்ட இந்த பேஸ்புக் பக்கத்தில், கருத்து தெரிவிப்பதற்கு நேற்று (புதன்கிழமை) மாலை முதல் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ள பதிவிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
“2010.01.26ஆம் திகதி முதல் நான் – பிரதமர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகள் ஆகியோரின் பேஸ்புக் கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றேன்.
இதற்கு முன் அவர்கள் யாரும், அவர்களின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் கருத்துகளை கட்டுப்படுத்தவில்லை.
எனினும், தற்போது கோபத்தை பிரதிபலிக்கும் வகையில் பேஸ்புகில் அதிகரித்து வரும் பொதுமக்களின் கருத்துகளை அனுமதிக்காத ஜனாதிபதியாகவும் அரசியல்வாதியாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணப்படுகின்றார்.“ என அவர் தெரிவித்துள்ளார்.