இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, ரஷ்யா உறுதி அளித்ததுபோல் படைக் குறைப்பில் ஈடுபடவில்லை என உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
துருக்கியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ நடவடிக்கையை குறைத்துக்கொள்வதாக ரஷ்யா உறுதியளித்தது.
ஆனால், எந்தப் படை குறைப்பிலும் ரஷ்யா ஈடுப்படவில்லை என்று செர்னிஹிவ் நகர மேயர் வியாசெஸ்லாவ் சாஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் வாக்குறுதியை நம்ப தயாராக இல்லை எனவும் ரஷ்யா தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்திவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
உக்ரைனில் ரஷ்யப் படையெடுப்பிலிருந்து 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தப்பித்து அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
அவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள், குழந்தைகள். இதுதவிர 60 லட்சம் பேர் உள்நாட்டிலேயே வாழ்விடத்திலிருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர் என ஐ.நா.வுக்கான அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தப் போரில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.