ஆர்ப்பாட்டம் எனும் போர்வையில் கலவரத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும், இவற்றுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நுகேகொட ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று, நிலைமைகளை பார்வையிட்டப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் பொருளாதார பிரச்சினையொன்று இருப்பதை நாம் அறிவோம். எரிவாயுப் பிரச்சினை, எரிபொருள் பிரச்சினை, மின்சாரப்பிரச்சினை என்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் என்ற ரீதியில் நாமும் வேலை செய்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், ஆர்ப்பாட்டம் எனும் போர்வையில் சொத்துக்களை சேதப்படுத்துவதையோ பேருந்துக்கு தீ வைப்பதையோ எம்மால் அனுமதிக்க முடியாது.
மக்களின் பாதுகாப்பே எமக்கு முக்கியமாகும். இதனால் சாதாரண பொது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது சாதாரண ஓர் ஆர்ப்பாட்டமாக தெரியவில்லை. இந்த சூழ்நிலையைப் பார்க்கும்போது இது தெளிவாகத் தெரிகின்றது.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு டொலரைக் கொண்டுவர முடியுமா? டீசலைக் கொண்டுவர முடியுமா? உண்மையில், இதன் பின்னணியில் அடிப்படைவாதக் குழுவொன்றே உள்ளது.
வெளியாகியுள்ள காணொளிகளில் இவர்கள் எவ்வாறான ஆயுதங்களுடன் இதில் கலந்து கொண்டிருந்தார்கள் என்பது தெரிகின்றது.
பொலிஸ் அமைச்சர் எனும் ரீதியில் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டில் ஏன் இவ்வாறான பொருளாதாரப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதை மக்களும் சிந்திக்க வேண்டும்.
மக்களுக்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட ஜனநாயக ரீதியாக உரிமையுள்ளது. ஆனால், ஆர்ப்பாட்டம் எனும் போர்வையில் கலவரத்தை ஏற்படுத்தும் செய்பாடுகளுக்கு நாம் எதிர்க்காலத்திலும் அனுமதிக்கப்போவதில்லை.
ஜனாதிபதி இதுவரை எந்தவொரு ஆர்ப்பாட்டத்தையும் எதிர்க்கவில்லை. எதிர்க்காலத்திலும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடலாம்.
எவ்வாறாயினும் இதுபோன்றதொரு சம்பவத்தை நாம் இனிமேல் பார்த்துக் கொண்டிருக்கப்போவதில்லை. இந்த சம்பவத்திற்கு பொறுப்பான அனைவருக்கு எதிராகவும் நாம் நடவடிக்கை எடுப்போம்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரேனும் நாட்டுக்கு ஒரு டொலரைக் கொண்டுவந்துள்ளார்களா? – இல்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க யோசனையை முன்வைத்துள்ளார்களா? – இல்லை. இதுதான் இங்குள்ள பிரச்சினையே.
நாட்டின் பிரச்சினையை தீர்க்க துளியளவும் ஒத்துழைக்காத தரப்பினர்தான் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.“ எனத் தெரிவித்துள்ளார்.