அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதைத் தவிர்க்குமாறு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன பொதுமக்களை வலியுறுத்தினார்.
அத்தோடு, வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் தொலைக்காட்சி அறிக்கையொன்றில் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அமைதியாக இருக்கும் என்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்துவதாகவும் கூறி சில போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டாலும், இரண்டு குழுக்கள் இந்த போராட்டங்களை நடத்துவதை அவதானிக்க முடிகிறது என்றும் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.
ஒரு பிரிவினர் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், மற்றொரு பிரிவினர் வேண்டுமென்றே பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து பொது சாலைகள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் அவர் கூறினார்.
இரண்டாவது குழு ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ளது என்றும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.
சில பகுதிகளில், மோட்டார் சைக்கிள்களில் எதிர்ப்பாளர்கள் இடம் விட்டு இடம் நகர்ந்து, குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் மற்றும் கற்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தினர் என்றும் அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில் மற்றொரு குழு சொத்துக்களைச் சூறையாடுவதில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், போராட்டக்காரர்களின் குடியிருப்புக்குள் கொள்ளையர்கள் புகுந்து திருடுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு அமைச்சு, பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸாருடன் முப்படைகளும் இந்த போராட்டங்களை கண்காணித்து வருகின்றன என்றும் அமைதியான போராட்டங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வன்முறைச் செயல்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இந்த நடவடிக்கைகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வன்முறையை தூண்டும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.