நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அதிகாரத்தை பயன்படுத்துமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமைச்சர்களின் வீடுகள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் ஜாதிக ஜன பலவேகய, முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளின் பலருக்கு தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தங்கள் கோபத்தை காட்ட வீதிக்கு வந்ததாக கூறிய அவர், ஆனால் பல கட்சி உறுப்பினர்கள் போராட்டங்கள் மூலம் தங்களுக்கு நன்மைகளை தேடுகிறார்கள் என்றும் கூறினார்.
எனவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
நாட்டு மக்களைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி தீர்மானம் எடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.