பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெறும் போராட்டங்களை அமைதியான முறையில் கட்டுப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் திடீர் தட்டுப்பாடு மற்றும் மோசமான பணவீக்கம், பண மதிப்பிழப்பு மற்றும் மின்வெட்டு போன்றவற்றால் நாட்டின் நிலைமை மோசமாகியுள்ளது.
இது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அடிப்படை பொருட்களைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்களால் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் ஊடக பேச்சாளர் லிஸ் த்ரோசல் தெரிவித்துள்ளார்.
அவசரகால நிலை பிரகடனம், ஊரடங்கு உத்தரவு, சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை மற்றும் போராட்டக்காரர்கள் மீதான தேவையற்ற வன்முறைகள் குறித்தும் தமக்கு செய்திகள் கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் எதிர்ப்பு போராட்டம் அல்லது கருத்து சுதந்திரத்திற்கு எதிராக அவசரகால சட்டத்தை பயன்படுத்த கூடாது என்றும் தற்போதைய நிலைமைகளை ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.