புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (புதன்கிழமை) இரவு அலரிமாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த முக்கியமான தருணத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அரசாங்கத்தின் பொறுப்பாக இருப்பதால் புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் இந்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாவும் புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஜனாதிபதியின் இராஜினாமாவால் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.