ராஜபக்ஷ குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் என சஜித்துடனான சந்திப்பின்போது மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அத்தோடு, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய பிரதமரைக் கொண்ட இடைக்கால ஆளும் சபையை நிறுவ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்
இந்தச் சபையின் ஊடாக நாட்டை அமைதிப்படுத்தவும், எண்ணெய் நெருக்கடி, எரிவாயு, உணவு, மருந்து, மின்சாரம் போன்ற பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவும் எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், இருபதாவது திருத்தம் மீண்டும் செய்யப்பட வேண்டும் என்றும், 19வது திருத்தம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், இது அரசாங்கத்திற்கு சர்வதேச ஆதரவை உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷ குடும்பம் வெளியேற வேண்டும் என்பதே மக்களின் அடிப்படைக் கோரிக்கை என்றும் எல்லா இடங்களிலும் இது ஒரு முக்கிய செய்தி என்றும் எனவே, ராஜபக்ஷ குடும்பம் வெளியேற வேண்டும் என்ற மக்களின் குரலுக்கு அரசாங்கம் செவிசாய்த்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் செயற்பாடுகள் ஒவ்வொன்றிலும் அரசியலமைப்பிற்கு அமைவாக ஜனநாயக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதையே தாம் கருதுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.