பிரான்ஸில் அடுத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான முதல்கட்டத் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் 27.6 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.
அதேபோல அவருக்கு கடும் சவாலாக திகழ்ந்த தீவிர வலதுசாரிக் கொள்கையுடைய சட்டத்தரணி மரீனே லீ பென், 23.0 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் உள்ள ஜீன் லூக் மெலன்சோன் 22.2 சதவீத வாக்குகளை பெற்றார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற முதல் சுற்றில் சுமார் 48.7 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க அழைக்கப்பட்டனர். 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மாலை 5 மணிக்குள், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 65 சதவீதம் பேர் வாக்களித்தனர். இது முந்தைய 2017 தேர்தலை விட 4.4 புள்ளிகள் குறைந்துள்ளது.
இரண்டு இறுதிப் போட்டியாளர்கள் ஏப்ரல் 24ஆம் திகதி இரண்டு வாரங்களில் பிரான்சின் உயர் பதவிக்கு போட்டியிடுவார்கள்.
கடந்த 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு, இரண்டாவது முறை போட்டியிட்ட எந்த ஜனாதிபதியும் வெற்றிபெறவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக இருந்துவரும் இமானுவல் மேக்ரானின், 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது.