அமைதியான போராட்டங்களை கட்டுப்படுத்த இராணுவ அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனநாயக ரீதியில் நடைபெறும் அமைதியான போராட்டங்களை ஒடுக்க இராணுவம் அனுப்பப்பட மாட்டாது என்றும் அறிவித்துள்ளார்.
சட்டவிரோதமான உத்தரவுகளை அமுல்படுத்துவதற்கு முன்னர் பல தடவைகள் சிந்திக்குமாறு பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிடம்பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கோரியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய பொலிஸாரினால் வேண்டுகோள் விடுக்கப்படும் பட்சத்தில் மட்டுமே இராணுவ உதவிகள் வழங்கப்படும் என கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
அமைதியான போராட்டங்கள் என்ற போர்வையில் அரச மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக பொலிஸ் சட்ட நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் சட்டம் ஒழுங்கையும் மக்களையும் பாதுகாப்பது தங்களின் கடமை என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.