கோட்டாவை வீட்டுக்கு போகுமாறு கேட்கும் ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருபகுதியினர் சுதந்திர சதுக்கத்தில் கூடியிருந்த பொழுது அவர்கள் மத்தியில் ஒரு பெண் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். அந்த உரையில் நான் பார்க்கக் கிடைத்த ஒரு பகுதியில் அவர் பின்வரும் பொருள்பட பேசுகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக பொருட்களை அனுப்பவிருப்பதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியபொழுது டுவிட்டரில் அச்செய்தியின் கீழ் அபிப்பிராயங்களைத் தெரிவித்த பெரும்பாலான தமிழர்கள் எங்களுக்கு மட்டும் உதவி செய்ய வேண்டாம் பாதிக்கப்பட்ட எல்லா இனத்தவர்களுக்கும் உதவி செய்யுங்கள் என்று எழுதுவதை பார்க்கிறேன். இது ஒரு முக்கியமான மாற்றம். இந்த புரிந்துணர்வை நாங்கள் தொடர வேண்டும்…..
உண்மை. தமிழக முதல்வர் உதவ முன் வந்த பொழுது சுமந்திரன் உட்பட தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் அவ்வாறுதான் கூறுகிறார்கள். தமிழகத்தின் உதவிகள் தனிய தமிழ் மக்களுக்கு என்று வராமல் முழு இலங்கைத் தீவுக்கும் உரியதாக வரவேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு பெருந்தொற்று நோய்க் காலத்திலும் பிரித்தானியாவில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒரு தொகுதி மருத்துவ உதவிகளை நாட்டுக்கு அனுப்ப விரும்பினார்கள். அந்த உதவியை தமிழர்களுக்கு என்று செய்யாமல் முழு நாட்டுக்கும் என்று செய்ய வேண்டும் என்று சுமந்திரன் கேட்டிருந்தார். அந்த அடிப்படையில் அவர் அரசாங்கத்தோடு அது தொடர்பாக பேச முற்பட்டார். ஆனால் அரசாங்கம் அதை நிராகரித்துவிட்டது. இப்பொழுது மறுபடியும் சுமந்திரன் தமிழக முதல்வரின் உதவி தொடர்பாக தெரிவித்த கருத்துக்களுக்கு தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரவிக்குமார் எதிர்வினை ஆற்றியிருக்கிறார். அதில் அவர் சுமந்திரனின் நிலைப்பாட்டை விமர்சித்திருந்தார்.
இந்தியா,அமெரிக்கா, ஐநா போன்ற வெளித் தரப்புக்கள் இலங்கைத்தீவில் கொழும்பிலுள்ள அரசாங்கத்தோடு தான் உறவுகளைப் பேணும். உதவிகளைச் செய்யும். அது அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்பு சார் உறவின் பாற்பட்டது. ஆனால் தமிழகம் ஈழத்தமிழர்களுக்கு உதவுவது அத்தகையது அல்ல. அது கடலால் பிரிக்கப்பட்டிருக்கும் ஆனால் இனத்தால் மொழியால் பண்பாட்டு நம்பிக்கைகளால் பிணைக்கப்பட்டிருக்கும் இரண்டு சமூகங்களுக்கிடையிலானது. இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பத் தேவையில்லை.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் மூன்று இனங்களுக்கும் உரியவைதான். அதேசமயம் அதற்கு எதிராகப் போராடும் சிங்கள மக்களின் எழுச்சியை தமிழ் மக்கள் நிதானமாக அணுக வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு ஐக்கிய இலங்கை என்ற மாயைக்குள் மூழ்கத் தேவையில்லை. அப்படி மூழ்கலாம் தான். எப்பொழுது என்று சொன்னால், சிங்கள-தமிழ்-முஸ்லிம் சமூகங்கள் ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படையில் பல்லினத் தன்மை மிக்க ஒரு சமஸ்டிக் கட்டமைப்பை உருவாக்கும் பொழுது அது சாத்தியமாகும். அவ்வாறு ஒரு சமஸ்டி கட்டமைப்புக்கு சிங்கள கூட்டு உளவியலை கட்டியெழுப்ப வேண்டும் வாருங்கள் என்று அழைத்தால் அதற்கு ஆங்கிலமும் சிங்களமும் தெரிந்த தமிழ் பிரதிநிதிகள் சிங்கள முற்போக்கு தரப்புடன் ஒன்று சேரலாம்.
இது விடயத்தில் மனோ கணேசன் சில சமயங்களில் சிங்கள மக்களின் குற்ற உணர்ச்சியை தூண்டக்கூடிய விதத்தில் கருத்துக்களை தெரிவிக்கின்றார். அண்மையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டில் அவர் அவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார். அதை அவர் சிங்களத்திலும் தெரிவிப்பார் என்று நம்பலாம். டுவிட்டரில் அதை ஆங்கிலத்தில் சிறு குறிப்பாக வெளியிட்டிருந்தார். மனோ கணேசனும் சரி சுமந்திரனும் சரி அவர்களைப் போன்ற சிங்களம் மற்றும் ஆங்கிலம் தெரிந்த அரசியல்வாதிகள் எல்லாரும் இப்பொழுது செய்ய வேண்டிய ஒரு முக்கிய காரியம் உண்டு. தென்னிலங்கையில் உள்ள படித்த நடுத்தர வர்க்க சிங்களவர்கள் மத்தியில் குற்ற உணர்ச்சியை தூண்டுவதே அது.
பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும் அரசியல் தலைமைத்துவத்தின் மீது ஏற்பட்ட விரக்தி வெறுப்பு காரணமாகவும் சிங்கள நடுத்தர வர்க்கம் கடுமையான கோபத்தோடு காணப்படுகிறது. இக்கோபத்தை அவர்கள் காலிமுகத்திடலிலும் ஏனைய பொது இடங்களிலும் வெளிப்படுத்தக் காணலாம். குறிப்பாக காலிமுகத்திடலில் இரண்டு குப்பைக் கூடைகளுக்கு மகிந்த மற்றும் கோத்தாபயவிடம் படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதோடு குப்பைகள் நிரப்பிக் கட்டப்பட்ட கறுத்தப் பொலித்தீன் பைகளின் கழுத்தில் ராஜபக்சக்களின் குரக்கன் நிறச் சால்வை தொங்க விடப்பட்டிருக்கிறது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யுத்தவெற்றி நாயகர்களாகப் போற்றிக் கொண்டாடப்பட்ட இரண்டு தலைவர்களை இப்பொழுது அதே சிங்கள மக்கள் குப்பைக் கூடைகளுக்குள் வீசும் ஒரு நிலை. ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் அவர்கள் ராஜபக்சக்களை குப்பைக் கூடைக்குள் வீசுகிறார்கள். அதற்காக யுத்த வெற்றியையும் அவ்வாறு குப்பைக் கூடைக்குள் வீசத் தயாரா என்பதுதான்.
தென்னிலங்கையில் தன்னியல்பாகத் திரளும் மக்கள் மத்தியில் சில பொதுவான அம்சங்களைக் காணலாம். முதலாவது அவர்கள் எந்த ஒரு கட்சியின் சின்னத்தையோ கொடியையோ ஏந்திக் கொண்டியிருக்கவில்லை. இரண்டாவது எந்த ஒரு கட்சியின் கோஷத்தையும் முன்வைக்கவில்லை. மூன்றாவது கட்சித் தலைவர்களை அல்லது முக்கியஸ்தர்களை தமது போராட்டங்களில் இணைத்துக் கொள்வதில்லை. நாலாவது தாங்கள் கூடும் இடங்களில் கட்சித் தலைவர்களை அல்லது கட்சிப் பிரமுகர்களைப் பேச அனுமதிப்பதில்லை. ஐந்தாவது -இது முக்கியமானது- அவர்கள் அனேகமாக ஸ்ரீலங்காவின் சிங்கக் கொடியை ஏந்தியிருக்கக் காணப்படுகிறார்கள். அவர்களை இணைக்கும் அம்சங்களில் ஒன்றாக சிங்கக்கொடி காணப்படுகிறது.
ஸ்ரீலங்காவின் தேசியக் கொடியில் காணப்படும் வாளேந்திய சிங்கத்தை தமிழ் மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதனை போராடும் சிங்கள மக்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு சுமந்திரன் மனோகணேசன் போன்றவர்களுக்கு உண்டு. அதுமட்டுமல்ல அந்த சிங்கத்தின் கூரான வாள் முனையில் தமிழ் மக்களின் நூற்றாண்டுகால ரத்தம் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். சிங்கள நடுத்தர வர்க்கம் நொந்துபோய் இருக்கும் இத்தருணத்தில் அவர்கள் மனதில் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். இது மிக முக்கியம். சிங்களக் கூட்டு உளவியலை குற்றவுணர்ச்சி கொள்ள வைப்பது. சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் எல்லாவற்றுக்குமாக சிங்கள மக்கள் மத்தியில் குற்ற உணர்ச்சியைத் தூண்ட வேண்டும்.
இலங்கைத் தீவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு முதலாவது முக்கிய முன்நிபந்தனை அதுவாகும். அவ்வாறு சிங்களப் பொது உளவியலை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கும்போது அது அதன் தர்க்கபூர்வ விளைவாக தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு தேவை என்ற நிலைப்பாட்டை எடுக்கும். அப்பொழுது சமஸ்டி கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளும் ஒரு மனோ நிலைக்கு அவர்களைத் தயார்படுத்தலாம். ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள கட்சிகளும் சரி சிவில் சமூகங்களும் சரி அதை எந்த அளவுக்கு செய்திருக்கின்றன? அல்லது செய்யத் தயாராக காணப்படுகின்றன?
அதேசமயம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள படித்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சிலர் இவ்வாறான தருணம் ஒன்றில் சிங்கள மக்களோடு சகோதரத்துவத்தை பேணுவதன் மூலம் அவர்களுடைய நம்பிக்கைகளை வென்றெடுக்கலாம் என்று ஒரு வாதத்தை முன் வைக்கின்றார்கள். அவர்கள் சிங்கள நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படும் மனமாற்றத்தை மனோரதிய படுத்துகிறார்களா?
சிங்கள மக்கள் மத்தியில் தோன்றிய இடதுசாரிகளும் சரி லிபரல்களும் சரி காலத்துக்கு காலம் அவ்வாறு மனமாற்றத்தை குறிக்கும் அல்லது மனச்சாட்சியின் பிரதிபலிப்பாக அமையும் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இறுதியிலும் இறுதியாக அவர்கள் எங்கே சென்று சரணடைகிறார்கள் என்று பார்த்தால் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பில்தான். கொல்வின் ஆர். டி. சில்வா, என். எம். பெரேரா, தொடங்கி தயான் ஜயதிலக்க மற்றும் ஜெகான் பெரேரா வரையிலும் அப்படித்தான் நிலைமை உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு டிலான் பெரேரா ஒரு இளம் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு வந்தபொழுது ரவிராஜ் என்னிடம் தனிப்பட்ட முறையில் சொன்னார்… டிலான் பெரேரா போன்ற நம்பிக்கையூட்டும் முற்போக்கான இளம் சிங்கள அரசியல்வாதிகள் அரங்கினுள் நுழைகிறார்கள் என்று. ஆனால் டிலான் கடைசியாக எங்கே போய்ச் சேர்ந்தார் ?
சிங்கள இடதுசாரிகள் நாடு முழுவதற்குமான வர்க்க உணர்வைப்பற்றி கதைக்கும் போது அது அதன் தர்க்கபூர்வ விளைவாக தமிழ் மக்களின் இன உணர்வை வர்க்க உணர்வுக்குள் கரைத்துவிட முற்படுகின்றது. அதுபோலவே சிங்கள லிபரலர்களும் ஒரே இலங்கை என்ற கோஷத்தை முன் வைக்கும் பொழுது அது தமிழ் மக்களின் தேசிய உணர்வை இலங்கை தேசியத்துக்குள் கரைப்பதிலேயே முடியும்.இங்கு பிரச்சினை என்னவென்றால் தமிழ் மக்களை அவர்கள் ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பதுதான். அந்த அடிப்படையில் தமிழ் முஸ்லிம் சமூகங்களின் தேசிய இருப்பை ஏற்றுக் கொண்டு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு அரசுக் கட்டமைப்பு மாற்றத்துக்கு அவர்கள் தயாரா என்பதுதான். இது முகநூலில் டுவிட்டரில் எழுதி சந்தோஷப்படும் விடயம் மட்டுமல்ல. காலிமுகத்திடலில் சுலோக அட்டைகளில் எழுதி செல்பி எடுக்கும் விவகாரமும் அல்ல. அதைவிட ஆழமானது. பிரதான நீரோட்ட கட்சிகள் சிங்கள பௌத்த இனவாத வாக்குகளை திரட்டும் பொழுது இந்த லிபரல்களும் இடதுசாரிகளும் எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்பதனை கடந்த ஒரு நூற்றாண்டு கால வரலாற்றில் இருந்து தமிழ் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக தமிழில் மிகத் தெளிவாகவும் தொகுத்தும் மு.திருநாவுக்கரசு கருத்து தெரிவித்திருக்கிறார்.
எனவே கோட்டாவை வீட்டுக்கு அனுப்பும் கோரிக்கையின் பின்னணியில் அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களையும் ஒருங்கிணைக்கும் பிரதான அம்சமாக காணப்படும் சிங்கக்கொடியை தமிழ்மக்கள் அப்பாவித்தனமாக பார்க்கத் தேவையில்லை. தங்களுடைய கடந்த கால அனுபவத்திற்கூடாகவே அவர்கள் பார்க்கவேண்டும். அதே சமயம் சிங்கள நடுத்தர வர்க்கத்தின் மனதில் ஏற்பட்டிருக்கும் சிறிய மாற்றங்களை எப்படி ஒரு பெரும் போக்காக ஒரு சமூகத்தின் கூட்டு உளவியல் ஆக மாற்றலாம் என்று மனோ கணேசன் சுமந்திரன் போன்றவர்கள் சிந்திக்கலாம். சிங்களப் பொது உளவியலை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கினால்தான் இலங்கைதீவில் நல்லிணக்கம் ஏற்படும். அதே சமயம் தமிழ் மக்களும் தமது கடந்த கால தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் தமது இறந்த காலத்தில் இருந்து கற்றுக்கொள்வது என்பது தமிழ் தேசிய அரசியலின் ஜனநாயக உள்ளடக்கத்தை மேலும் செழிப்பாக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான். மாறாக தமிழ்த் தேசிய அரசியலை கைவிட்டு சிறீலங்கர்களாக மாற வேண்டும் என்ற அடிப்படையில் அல்ல.