மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் வீரர்கள் சரணடைய வேண்டும் என்றும் எதிர்த்து போரிட்டால் கொல்லப்படுவார்கள் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில், ”மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் வீரர்கள், ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்தால், அவர்களின் உயிர்களுக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். சரணடைய மறுத்து தொடர்ந்து சண்டையிட்டால், முற்றிலும் அழித்துவிடுவோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய படைகள், அங்கு துறைமுக பகுதியான மரியுபோல் நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.
உக்ரைன் மீது 53ஆவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், உக்ரைன் வீரர்கள் சரணடைய அந்நாட்டு இராணுவம் தடை விதித்திருப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் இகார் கோனாஷென்கோ கூறியுள்ளார்.
இதுகுறித்து உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறுகையில், ”டான்பாஸ் பகுதியில் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது. எங்களுக்கு சரணடையும் எண்ணம் இல்லை. மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் வீரர்களை கொன்றால், அது இரு நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு முடிவு கட்டும்” என கூறினார்.
ரஷ்யாவுடன் கடந்த 7 வாரங்களாக நடந்த போரில் 3,000 வீரர்களை இழந்துவிட்டதாக உக்ரைன் முதல் முறையாக கூறியுள்ளது. ரஷ்யாவும் 20,000 வீரர்களை இழந்துவிட்டதாகவும் உக்ரைன் கூறியுள்ளது.