அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமது கட்சி 113க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, அரசாங்கத்திலிருந்து வெளியேறியவர்கள் தமக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதால், பிரேரணைக்கு தேவையான எண்ணிக்கை தங்களிடம் உள்ளதாக தெரிவித்தார்.
இடைக்கால அரசாங்கத்தில் இருந்து விலகி இருப்பதே தங்களின் முந்தைய நிலைப்பாடாக இருந்தது என்றும் ஆனால் தாங்கள் இடைக்கால அரசாங்கத்தில் பதவிகளை ஏற்காவிட்டால், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் கூறியதால், நாங்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
எனவே, தற்போதைய அரசாங்கத்தின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்றும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட சுயேச்சைக்குழு தீர்மானித்துள்ளதாக சுயேட்சைக்குழு உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமருடன் இடைக்கால அரசாங்கம் நியமிக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.