ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தயாரித்துள்ளதுடன், அது நாடாளுமன்றம் கூடியதும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்தப் பிரேரணைக்கு ஐக்கியத் தேசியக் கட்சி ஏற்கனவே தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதாகவும் தற்போது ஏனைய எதிர்க்கட்சிகளிடமும் கையொப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பிரேரனையில் 113 கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டால், ஜனாதிபதியை நீக்குவதற்கான சட்டபூர்வமான தன்மை இருக்காது என்றபோதிலும் இது ஜனாதிபதியின் மீதான நம்பிக்கையை நாடாளுமன்றம் இழந்துவிட்டது என்பதை தெளிவாகக் காட்டும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஜே.வி.பியும் ஜனாதிபதிக்கு எதிரான இந்த பிரேரணையில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கையொப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் எந்த ஒரு இலாகாவையும் ஏற்க மாட்டோம் என்று பகிரங்கமாக முதலில் கூறியவர்களில் விமல் வீரவன்சவும் ஒருவர் என்பதால், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட 11 உறுப்பினர்கள் குறித்த பிரேரணையில் கையெழுத்திட அணுகப்படுவார்கள் என்று மூத்த வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.