ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான போலந்துக்கும் பல்கேரியாவுக்கும் எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
எரிவாயுவுக்கான பணத்தை ரஷ்ய நாணயமான ரூபிளில் வழங்க அந்த நாடுகள் மறுப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு அரசு எண்ணெய் நிறுவனமான கேஸ்ர்போம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் எரிவாயுவுக்கான தொகையை ரூபிளில் செலுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
எனினும், அவ்வாறு தொகை செலுத்தாத போலந்து, பல்கேரியா ஆகிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் புதன்கிழமை முதல் நிறுத்தப்படுகிறது. ஏற்கெனவே பெற்ற எரிவாயுவுக்கான தொகையை அந்த நாடுகள் ரூபிளில் செலுத்தாதவரை இந்தத் தடை தொடரும்.
மற்ற நாடுகளுக்காக குழாய் மூலம் அனுப்பப்படும் எரிவாயுவை போலந்தும் பல்கேரியாவும் அனுமதி பெறாமல் எடுத்துக்கொள்ளக் கூடாது. அவ்வாறு அவை எடுத்துக்கொண்டால், எந்த அளவுக்கு எடுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு மற்ற நாடுகளுக்கான எரிபொருள் விநியோகம் குறைக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளையும் பொறுத்தவரையில், போலந்து 53 சதவீத எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே இதுவரை இறக்குமதி செய்து வந்தது. பல்கேரியா 90 சதவீத எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே பெற்று வந்தது.
போலந்துக்கும் பல்கேரியாவுக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதன் மூலம், ஐரோப்பிய நாடுகளை மிரட்டிப் பணியவைக்க ரஷ்யா முயல்வதாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொண்டெர் லெயென் குற்றம் சாட்டியுள்ளார்.