போராட்டங்களால் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது எனவும், அது பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கும் எனவும் சுற்றுலா மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை அரசாங்கத்திற்கு எதிராக போராடுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, “நாட்டின் அரசாங்கத்தை மாற்றும் செயற்பாடுகள் அரசியலமைப்பின் பிரகாரம் இடம்பெற வேண்டும்.
தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. நாட்டில் நிலவும் அமைதியின்மையே இதற்குக் காரணம். நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சுற்றுலாத்துறையை வலுப்படுத்த வேண்டும். இந்த நாட்டிற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வேண்டும். நாடு அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருந்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகிறார்கள்.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடையும் வரை இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. யுத்தம் முடிவடைந்து நாடு அமைதியான நிலையில் இருந்தபோது, ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொவிட் தொற்றுநோயால் சரிந்தது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண உண்மையான விருப்பம் இருந்தால், நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வழிகளைத் தடுக்கும் வகையில் போராட்டக்காரர்கள் செயற்படக்கூடாது. எனவே, போராட்டக்காரர்கள் யதார்த்தமாகச் சிந்தித்து தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வுகாண ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.