அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 26ஆவது நாளாக இன்றும் (புதன்ழமை) தொடர்கிறது.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேநேரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அலரி மாளிகைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 8ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள் சிலர் தொடர்ச்சியான உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு இலவச பேருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு நாட்டில் எங்கிருந்தும் இலவசமாகபேருந்துகளை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி பேருந்துகளை முற்றுகையிடவும் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.