நாடாளுமன்ற நுழைவு வீதிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் இன்று மற்றும் நாளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி,நாடாளுமன்றத்தை அண்மித்த தியத்த உயன பொல்தூவ சந்திமுதல் ஜயந்திபுர சந்திவரையான வீதியும் ஜயந்திபுர சந்தி முதல் கியங்ஹேன் சந்திவரையான வீதியும் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொதுமக்கள் போராட்டம் நடத்துவதால், குறித்த வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
பாதுகாப்பு காரணங்களுக்காக பொல்துவ சுற்றுவட்டத்திலிருந்து நாடாளுமன்றம் வரையான வீதி நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளது.
இதனால் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடவுச்சீட்டு சேவைகளுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு விஜயம் செய்த குழுவினர் பத்தரமுல்லையில் இருந்து வீதியை மறித்து சேவைகளை இடைநிறுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதன் காரணமாக பொரளை – கொட்டாவ, பொரளை – கடுவலை வீதிகளில் சுமார் ஒரு மணிநேரம் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவசர கணினி பராமரிப்பு காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உட்பட அனைத்து கிளை அலுவலகங்களிலும் இன்று ஒரு நாள் மற்றும் சாதாரண சேவை கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.