அவசரகால சட்டம் மீண்டும் பிரகடனப்படுத்தபட்டுள்ளதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
அத்தோடு அரசாங்கம் மக்களின் அமைதியான போராட்டங்களை நசுக்கும் முயற்சியினையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் ஸ்திரத்தன்மையுடன் இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தமையையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆகவே நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லை என்றால் இவ்வாறான நடவடிக்கைகள் பொருளாதாரத்தை மிக மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரித்தார்.
மக்கள் முழுமையாக அரசாங்கத்தை எதிர்க்கும் நிலைக்கு வந்திருக்கின்ற வேளையில் தமக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்தவே அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.