காலி முகத்திடலில் உள்ள கோட்டா கோ கம போராட்ட தளத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான டி.ஐ.ஜி.க்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது.
நேற்றைய மோதல்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 231 பேர் காயமடைந்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, அலரிமாளிகைக்கு அருகில் உள்ள மைனா கோ கம போராட்டத் தளத்தின் மீது அரசாங்க சார்பு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அவர்கள் கோட்டா கோ கம எனப்படும் காலி முகத்திடலில் உள்ள பிரதான போராட்டத் தளத்திற்குச் சென்று பல கூடாரங்களை அழித்ததுடன் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களையும் தாக்கினர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த இலங்கை பொலிஸ், கலகத் தடுப்புப் பொலிஸார், இலங்கை இராணுவம் மற்றும் ஏனைய சட்ட அமலாக்க முகவர் நிலையங்கள் வரவழைக்கப்பட்டதோடு, அமைதியின்மையைக் கட்டுப்படுத்த இலங்கை பொலிஸார் இறுதியில் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.