பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியின் மகன் ஃபெர்டினாண்ட் ‘போங்பாங்’ மார்கோஸ் ஜூனியர், ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெறத் தயாராகிவிட்டதாக, பகுதி மற்றும் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஃபெர்டினாண்ட் ‘போங்பாங்’ மார்கோஸ் ஜூனியர், இதுவரை 55.8. சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருப்பதாக அறிய முடிகின்றது. போட்டியாளரான லெனி ராப்ரிடோ 28 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
போங்பங்கின் வெற்றி 36 ஆண்டுகளுக்குப் பிறகு மார்கோஸ் குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவதைக் குறிக்கின்றது.
கடும் ஊழலில் இருந்த அவரது குடும்பத்தின் ஆட்சிக்காலத்தை பொற்காலம் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அவரது தந்தை, முன்னாள் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ், அவரது கொடூரமான சர்வாதிகார ஆட்சிக்கு பெயர் பெற்றவர்.
மார்கோஸ் சீனியர், மனைவி இமெல்டா மற்றும் அவர்களது உறவினர்களுடன் சேர்ந்து, 1986இல் ஒரு மக்கள் கிளர்ச்சியால் அகற்றப்படுவதற்கு முன்பு, பொது நிதியிலிருந்து 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொள்ளையடித்தனர்.
இந்த காலகட்டத்தில் பிலிப்பைன்ஸின் பொருளாதாரம் பெரும் கடனில் இருந்தது மற்றும் சாதாரண மக்கள் இதற்கெதிராக போராடினர்.