செல்வாக்கு மிக்க அரச பதவிகளுக்கு ஈடாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முறைகேடான செல்வத்தை மறைத்ததாக குற்றம் சாட்டப்படும் 12பேருக்கு பிரித்தானியா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
அவர்களில் அவரது முன்னாள் மனைவி லியுட்மிலா ஓச்செரெட்னயா மற்றும் அவரது இரகசிய காதலியாக நம்பப்படும் 38 வயதான முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை அலினா கபேவா ஆகியோர் அடங்குவர்.
இதுதவிர, புடினின் நெருங்கிய குடும்ப உறுப்பினரான இகோர் புதின் என்பவர் மீதும் தடை விதிக்கப்படுகிறது. ரஷ்ய தொழிலதிபரான இகோர், பெசெங்கா சர்வதேச கடல் துறைமுக இயக்குனராக இருந்து வருகிறார்.
38 வயதான அலினா கபேவா, புடினின் ரகசிய காதலியாகவும், புடினின் நான்கு குழந்தைகளின் தாயாகவும் இருப்பதாக கருதப்படுகின்றது.
புடினின் ரகசிய காதலி, ‘நேசனல் மீடியா குரூப்’ என்ற ரஷ்யாவில் உள்ள ஒரு மிக பெரிய தொலைக்காட்சி ஒன்றின் இயக்குனர்கள் சபை தலைவராக இருந்து வருவதுடன், ஆண்டொன்றுக்கு 80 லட்சம் யூரோக்கள் மதிப்பிலான சம்பளம் அவருக்கு வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
புடின் மற்றும் கபேவா ஜோடி ஒன்றாக இணைந்து இருக்கும் புகைப்படங்கள் பல்வேறு தருணங்களில் வெளிவந்துள்ளன.
புடினின் விமர்;சகரான எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி அமைத்திருந்த புலனாய்வு அமைப்புகளின் கூற்றுப்படி, ரஷ்யாவை சேர்ந்த அரசியல் செல்வாக்கு மிகுந்த வர்த்தக தலைவர்கள் பலர் அன்பளிப்பு என்ற வகையில், வீடு, பணம் மற்றும் பிற சொத்துகளை கபேவாவின் குடும்பத்தினருக்கு அளித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், உக்ரைன் மீது போர் தொடுக்கும் முன்பு, தனது ரகசிய காதலி கபேவாவை, சுவிஸ்லாந்தில் உள்ள தனியார் வசமுள்ள பகுதிக்கு புதின் அனுப்பி வைத்துள்ளார் என நம்பப்படுகிறது.
அலினாவை சுவிஸ்லாந்தில்இருந்து வெளியேற்றும்படி கோரிக்கைகள் வலுத்தன. இந்த சூழலில், புடினின் ரகசிய காதலியான அலினா மற்றும் புடினின் முன்னாள் மனைவியான லுட்மிலா ஆக்ரெத்னயா ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா புதிய தடைகளை விதித்துள்ளது.
இதுகுறித்து பிரித்தானிய வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் கூறுகையில், ‘புடினின் குடும்பம், பால்யபருவ நண்பர்கள் மற்றும் புடின் அரசாட்சியில் பலன் பெற்ற நபர்கள், பதிலுக்கு புடினின் வாழ்க்கை முறைக்கு ஆதரவாக இருந்தவர்கள் ஆகியோர் மீது புதிய தடைகள் விதிக்கப்படுகின்றன.
புடினின் ஆடம்பர வாழ்க்கை முறைக்கு முட்டுக்கட்டை போடும் நிழலான வலையமைப்பை நாங்கள் அம்பலப்படுத்துகிறோம் மற்றும் குறிவைக்கிறோம்.
உக்ரைன் மேலோங்கும் வரை புடினின் ஆக்கிரமிப்புக்கு உதவுபவர்கள் மீது நாங்கள் தடைகளை விதிப்போம்’ என கூறினார்.
கடந்த பெப்ரவரி பிற்பகுதியில் உக்ரைன் மீது படையெடுப்பதற்கு புடின் உத்தரவிட்டதிலிருந்து, 140 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள தன்னலக்குழுக்கள் உட்பட, 1,000க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் 100 ரஷ்ய நிறுவனங்கள் மீது பிரித்தானியா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.