பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் ஒருவரின் பெயர் பரிந்துரை செய்யப்படவுள்ளமையானது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என CaFFE அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் வலுப்பெறும் என CaFFE அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
6ஆவது நாடாளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களுடன் ஒப்பிடுகையில் 7ஆவது நாடாளுமன்றத்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 சதவீதம் குறைவாகவே காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிடமாகவுள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹினி கவிரத்னவின் பெயரை பரிந்துரை செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
அத்துடன், பிரதி சபாநாயகர் பதவிக்கு அஜித் ராஜபக்ஷவின் பெயரை பரிந்துரை செய்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இதுகுறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
பிரதி சபாநாயகருக்கான தேர்வின்போது, ரோஹினி கவிரத்னவை ஆதரிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.