தான் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியினை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் மறுத்துள்ளார்.
விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த செய்தியினை மறுத்துள்ளார்.
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நான்கு நிபந்தனைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தது.
மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எமது கட்சி முன்வைத்துள்ள இந்த நிபந்தனைகள் மிகவும் நியாயமானவை என்பதையும், கட்சியின் இந்த நிலைப்பாட்டுடன் தான் உடன்படுவதாகவும் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கட்சியின் கொள்கைகளுக்கு எந்த வகையிலும் துரோகம் இழைக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்வதற்கும், அவற்றுக்கான நிரந்தரத் தீர்வுகளைக் கொண்டு வருவதற்கும் தாங்கள் தொடர்ந்து கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் நேர்மறையான பொருளாதார சீர்திருத்தத்திற்கு ஆதரவளிப்பதற்கு விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.