நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் விபரங்களை வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக 170 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், ஊரடங்குச் சட்டத்தை மீறியமை, தாக்குதல், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அவர்களில் 68 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மரணம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களினால் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கப்பட்டதை அடுத்து நிட்டம்புவ பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அவர் தாக்குதல் காரணமாக உயிரிழந்தமை பின்னர் உறுதி செய்யப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடந்த 9ஆம் திகதி தாக்குதல் நடத்தியிருந்தனர்.
கொழும்பு அலரி மாளிகையில் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தித்து ஆதரவு தெரிவித்ததன் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன், அலரி மாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ‘மைனா கோ கம’ போராட்ட களம் மற்றும் காலி முகத்திடலில் உள்ள ‘கோடா கோ கம’ போராட்டகளம் இரண்டையும் அவர்கள் தகர்த்தெறிந்திருந்தனர்.
இதனையடுத்து, கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் உட்டபட பொதுமக்களும் இணைந்து எதிர்த்தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் சேதமாக்கப்பட்டிருந்ததுடன், மஹிந்தவின் ஆதரவாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்த பேருந்துகளும் சேதமாக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக ஆர்ப்பாட்டக்காரர்களால் சுமார் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 200 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கடந்த 9ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்த பிரதான சந்தேக நபர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன என்பதுக் குறிப்பிடத்தக்கது.